என் மலர்
செய்திகள்

விவசாயிகளுக்கு உதவிதொகை வழங்குவதில் கோடிக்கணக்கில் மோசடி - வேளாண் ஊழியர்கள் 17 பேரிடம் விசாரணை
வேலூர்:
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனும் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தை பயன்படுத்தி வேளாண் அதிகாரிகள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் பெறப்பட்டன.
வேலூர் மாவட்டத்திலும் இதுகுறித்த புகார்கள் பெறப்பட்ட நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. அதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவபர்கள் பலரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் போன்று போலி முகவரி கொடுத்து 2 கட்ட தவணைத்தொகையை பெற்றிருப்பது தெரியவந்தது.
இதன் இறுதி அறிக்கை, சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு கிராமத்திலும் பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் குறித்து விசாரித்ததில், 90 சதவீதம் போலியான முகவரிகளே இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர் விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் வரையில் அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
அதில் முதல்கட்டமாக 25 லட்சம் திரும்ப பெறப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வேளாண் ஊழியர்கள் உள்பட 17 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த முறைகேடு திருவண்ணாமலை மாவட்டத்திலும் அதிக அளவில் நடந்து இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.18 கோடி முறைகேடு நடந்து இருக்கலாம் என விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் பேர் போலியான ஆவணங்களை அளித்து முறைகேடாக நிதி உதவியை பெற்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களிலும் இத்திட்டத்தில் பயன்பெற்ற நபர்களின் உண்மை தன்மையை விசாரணை செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதையொட்டி ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை மோசடியாக நிதி உதவியை பெற்றவர்களிடமிருந்து ரூ.2 கோடி வரை திரும்ப வசூலித்திருப்பதாக வேளாண்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் குழு தலைவி ஜீவாவை திருவண்ணாமலை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் ஜீவா 100க்கும் மேற்பட்டவர்களுக்கு போலியாகவும், விவசாயி அல்லாதவர்களுக்கும் நிதியை வாங்கிக் கொடுத்துள்ளதாகக் தெரியவந்துள்ளது.
தண்டராம்பட்டு பகுதியில் கிசான் சம்மான் திட்டத்தில் 2,488 நபர்களின் வங்கிக் கணக்கில் கடந்த 1-ந் தேதி தலா ரூ 2000 செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மண்டல துணை தாசில்தார் சரண் தலைமையில் வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
வாணாபுரம், தண்டராம்பட்டு, பெருங்குளத்தூர், தானிப்பாடி, ரெட்டியார் பாளையம் ஆகிய கிராமங்களில் இயங்கிவரும்வங்கிகளில் மேற்கண்ட 2,488 நபர்களின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்குமாறு வங்கி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் அவர்களது வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டது. அவர்கள் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்கு சென்று உரிய ஆவணங்களை காண்பித்து தகுதியானவர்களாக இருந்தால் அவர்களுக்கு பிரதமரின் நிதியுதவி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






