search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி
    X
    கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி

    கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக ஜெயசந்திரபானு ரெட்டி பதவியேற்பு

    கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக ஜெயசந்திரபானு ரெட்டி பதவியேற்று கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த பிரபாகர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக, பழனி தண்டாயுதபாணி கோவிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்த டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்புகளை பிரபாகர் ஒப்படைத்தார்.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, டாக்டர். என்.டி.ஆர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்சிப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டார். இவர் கடலூர் மாவட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆக நியமிக்கப்பட்டு, பின்னர் திருச்சி மாவட்டம் லால்குடி உதவி கலெக்டராக பணிபுரிந்தார்.

    அதன்பின்னர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனராகவும், மருத்துவம் மற்றும் குடும்ப நலப்பணிகள் துறையின் துணை செயலாளராகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் துணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். அதை தொடர்ந்து பழனி தண்டாயுதபாணி கோவிலின் செயல் அலுவலராக பணியாற்றி வந்தார்.

    அதன் தொடர்ச்சியாக தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். கலெக்டராக பொறுப்பேற்ற ஜெயசந்திரபானு ரெட்டி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் தற்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். இந்த மாவட்டம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற கண்டிப்பாக முழு முயற்சி செய்வேன். அரசு திட்டங்கள் அனைவரையும் சென்றடைய பாடுபடுவேன். அரசு வழிகாட்டுதலின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வேன் என்று கூறினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் உடனிருந்தார்.
    Next Story
    ×