search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர்
    X
    என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சங்கர்

    ‘இளநீர் சங்கர்’ பிரபல ரவுடியாக மாறியது எப்படி?- பரபரப்பு தகவல்கள்

    சங்கர் ஆரம்பத்தில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இளநீரை வெட்டுவதற்காக அரிவாளை தூக்கிய அவர், காலப்போக்கில் மனிதர்களை வெட்ட அரிவாளை பயன்படுத்த ஆரம்பித்தார்.
    சென்னை:

    சென்னை அயனாவரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 48). பிரபல ரவுடியான இவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் அயனாவரம் சங்கர் என்றும் இளநீர் வியாபாரம் செய்து வந்ததால் ‘இளநீர் சங்கர்’ என்றும் அழைத்து வந்தனர். இளநீர் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் சங்கர் கஞ்சா வியாபாரத்தை கையில் எடுத்தார். அதில் அவருக்கு நல்ல வருமானம் வந்தது. அயனாவரம் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த பெண் ஒருவரோடு அவருக்கு காதல் மலர்ந்தது. காதலியின் துணை கிடைத்ததால் சங்கருக்கு கஞ்சா கடத்தலில் பலம் அதிகமானது.

    இந்தநிலையில் அயனாவரத்தை சேர்ந்த சகோதரர்கள் ஞானம் மற்றும் நொண்டி கார்த்தி ஆகியோருக்கும், சங்கருக்கும் கஞ்சா விற்பதிலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதிலும், மாமூல் வசூலிப்பதிலும் மோதல் இருந்து வந்தது.

    இதில் கடந்த 2007-ம் ஆண்டு சங்கரை எதிர் கோஷ்டியினர் கொலை செய்யும் நோக்கத்துடன் அரிவாளால் தாக்கினர். காயங்களுடன் தப்பிய சங்கர் இதற்கு பழி தீர்க்க காத்திருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு சங்கரின் தம்பி கதிர்வேலை எதிர் கோஷ்டியினர் வெட்டிகொலை செய்தனர். தன்னையும் கொலை செய்துவிடுவார்கள் என்று எண்ணிய சங்கர் எதிரிகளான ஞானம் மற்றும் நொண்டி கார்த்திக்கின் கூட்டாளியும், அவர்களுக்கு வழிகாட்டியுமாக இருந்த அவர்களது சித்தப்பா விஜியை (35) 2010-ம் ஆண்டு திரு.வி.க. நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொலை செய்தார். இது தான் அவர் தூக்கிய அரிவாளுக்கு முதல் பலி.

    இந்த வழக்கில் சங்கருக்கு ஆதரவாக வாதாடிய வக்கீலை எதிர் கோஷ்டியினர் கொலை செய்துவிட்டனர். இது சங்கருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் அவர் சிறிது காலம் தலைமறைவாக இருந்தார்.

    இருப்பினும் தனது தம்பியின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த திருமுல்லைவாயிலை சேர்ந்த பாலாஜி என்ற யமஹா பாலாஜியை பழிதீர்க்க சங்கர் காத்திருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமுல்லைவாயிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து பாலாஜி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இதுபோல் பூந்தமல்லியில் மாமூல் கேட்டு தராத ‘கட்டிட காண்ட்ராக்டர்’ ஒருவரை அச்சுறுத்த, அவரது தம்பியை சங்கர் போட்டு தள்ளியதாக தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் காங்கிரஸ் பிரமுகருமான சரவணனிடம் கடந்த 5-ந்தேதி சங்கர் மாமூல் கேட்டுள்ளார். மாமூல் தர மறுத்த சரவணனை சங்கர் தனது ஆதரவாளர்களை அனுப்பி கத்தியால் சரமாரியாக தாக்கினார்.

    இச்சம்பவம் குறித்து அயனாவரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜ், சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ், போலீஸ்காரர் முபாரக் உள்பட 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சங்கரை இரவு, பகலாக தேடி வந்தனர். இந்தநிலையில் தான் போலீசார் என்கவுண்ட்டரில் சங்கர் பலியாக நேரிட்டது.
    Next Story
    ×