search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    நாகை மாவட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    நாகை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிக்கல்: 

    கீழ்வேளூர் ரெயில் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் அங்காடி சேகர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ.வை சேர்ந்த வசந்தி, ஏ.ஐ.டி.யூ.சி.வை சேர்ந்த மகேந்திரன், மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் சட்டங்களை முடக்க கூடாது. 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக்க கூடாது. மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. இயற்கை வளங்களை அன்னியர்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் வலிவலம் கடைத்தெருவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த செல்வராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. சுமைதூக்கும் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முனியாண்டி, சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

    மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பாக பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச.மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானத்தொழிற்சங்க மாநில செயலாளர் ஜெகமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார். இதேபோல ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன்பும் நடந்தது. திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நாகை அவுரி திடலில் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சரபோஜி முன்னிலை வகித்தார்.

    பொது முடக்கத்தால் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 6 மாத காலத்துக்கு நிவாரணம் மற்றும் இலவச ரேசன் அரிசி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுமுடக்க காலத்தை பயன்படுத்தி சம்பள வெட்டு, ஆள்குறைப்பு செய்வதை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே, நிலக்கரி சுரங்கம் பாதுகாப்புத்துறை, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    வேளாங்கண்ணி அருகே உள்ள மேலப்பிடாகை கடைத்தெருவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் முருகையன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் பேசினர்.
    Next Story
    ×