search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஈரோடு சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய 4 போலீசார் பணியிட மாற்றம்

    ஈரோடு சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய 4 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நடவடிக்கை எடுத்தார்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியில் ஈரோடு-நாமக்கல் மாவட்ட எல்லை உள்ளது. அங்கு போலீஸ் துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. கருங்கல்பாளையம் போலீசார் அங்கு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு உள்ளே நுழையும் வாகனங்களை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் லாரி டிரைவர்களிடம் போலீசார் லஞ்சம் வாங்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றிய புகார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு சென்றது. அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், அந்த வீடியோ பதிவானபோது பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, “சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கியதாக வந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். விசாரணையின் முடிவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார்.
    Next Story
    ×