search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
    X
    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

    தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக்க திட்டம்- அமைச்சர் தகவல்

    பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க அதிவிரைவு கருவிகளை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனாம் பகுதியில் ஆந்திராவை போன்று ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் பிற்பகலிலேயே கடைகள் மூடப்படுகின்றன. இதன் காரணமாக வியாபாரம் தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே புதுவையில் உள்ளதை போன்று நேரங்களை கடைப்பிடிப்பது குறித்து தலைமை செயலாளரிடம் பேசியுள்ளேன்.

    பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடை வெளியை பின்பற்றுவது தொடர்பாக இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது நிறைய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அதன்படி 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொரோனா மருத்துவமனையாக மாற்ற உள்ளோம். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கானவர்களை மட்டும் அனுமதிக்க கூறி உள்ளேன். அவர்களுக்கு உதவியாக ஒருவரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் இப்போது நிறைய கூட்டம் காணப்படுகிறது. அங்கு வருபவர்கள் அரசின் கட்டுப்பாடுகளை மதித்து சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை. இதனால் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    புதுவையில் தற்போது தொற்று பாதிப்பு என்பது சற்று குறைவாகவே உள்ளது. இதே நிலையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்காவிட்டால் பிற மாநிலங்கள் போல் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து விடும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×