search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு ஆனைக்கல்பாளையம் ரிங் ரோட்டில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.
    X
    ஈரோடு ஆனைக்கல்பாளையம் ரிங் ரோட்டில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது எடுத்த படம்.

    ஈரோடு-கோபி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    ஈரோடு மற்றும் கோபி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு ஆனைக்கல்பாளையம் ரிங் ரோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

    எனினும் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்து முன்னணி சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.

    இதனால் நேற்று காலை ஈரோடு தாலுகா போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக அங்கு திரண்டு வந்தனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இப்படி கூட்டமாக கூடி வருவதும், டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதும் தவறு. இதை மீறி முற்றுகையிட்டால் நீங்கள் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர்.

    இதனால் பொதுமக்கள் அங்கிருந்து ரிங்ரோடு பகுதிக்கு திரண்டு வந்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மேலும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    அதற்கு போலீசார், ‘இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்குள் செல்லும் முக்கிய சாலையின் வழியாக டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் பெண்களிடம் கூறும்போது, ‘இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளியுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் கோபி ஆர்.டி.ஓ.விடம் மனு அளிக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×