search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தாரகை, பாலாஜி
    X
    செந்தாரகை, பாலாஜி

    இளம்பெண் மர்மசாவில் திடீர் திருப்பம் - தந்தையே மகளின் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்

    உத்திரமேரூரில் இளம்பெண் மர்மசாவில் திடீர் திருப்பமாக அவரது தந்தையே மகளின் கழுத்தை நெரித்து கொன்றது தெரிந்தது.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வெங்கடையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர், உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் பணி புரிந்தும், பல்வேறு வரலாற்று கல்வெட்டு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டும் வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுடைய மகள் செந்தாரகை.

    கடந்த மே மாதம் 24-ந்தேதி செந்தாரகைக்கும், உத்திரமேரூர் நரசிம்ம நகரை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் எளிய முறையில் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகள் வண்டலூரில் வசித்து வந்தனர்.

    கடந்த ஜூன் மாத இறுதியில் செந்தாரகை தன்னுடைய தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு தங்கி இருந்த செந்தாரகை கடந்த 8-ந்தேதி குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். செந்தாரகையின் உடலை அடக்கம் செய்ய அவரது பெற்றோர் அவசரம் காட்டினர். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உத்திரமேரூர் போலீசார் செந்தாரகையின் சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருமணமாகி சில மாதங்களே ஆனதால் காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் செந்தாரகை கழுத்து நெரிக்கபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து உத்திரமேரூர் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் செந்தாராகையின் தந்தை பாலாஜியை கைது செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், செந்தாரகை திருமணத்துக்கு முன்பு வேறு ஒரு நபரை காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலாஜி, மகளை மிரட்டி அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த செந்தாரகை ,கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து தாய் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். செந்தாரகையின் பெற்றோர் அவரை சமாதானம் செய்ய பல வகையில் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி, மகளின் கழுத்தை நெரித்து பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் மயங்கி விழுந்த செந்தாரகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும், பின்னர் போலீசுக்கு பயந்து குளியல் அறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறியதும் தெரிந்தது.

    இதையடுத்து கைதான பாலாஜி மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×