search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    காரைக்காலில் முதல் பலி- கொரோனாவுக்கு முதியவர் உயிரிழப்பு

    காரைக்காலில் கொரோனாவுக்கு முதல் பலியாக 60 வயது முதியவர் உயிரிழந்தார். நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    காரைக்கால்:

    5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்குப் பின் காரைக்காலில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக இருந்தது.

    இந்த நிலையில் காரைக்காலில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 90 பேருக்கு நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் நேற்று காலை தெரியவந்தது. இதில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் காரைக்காலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட 25 பேரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காரைக்கால் திருநள்ளாறு சாலை சாமியார் குளத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் கடந்த 4-ந் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தெரிவதற்குள், நேற்று முன்தினம் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு முதல் பலி பதிவாகியுள்ளது.

    மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 32 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி வரை 3,025 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. காரைக் கால் வயல்கரை வீதியை சேர்ந்த சுமார் 65 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், மாதா கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் பழகியதால், அவர் மூலம் 11 பேருக்கு தொற்று பரவி உள்ளது. அந்த 65 வயது நபரும், கடந்த சில தினங்களாக சளியுடன் சுற்றிவிட்டு, பிறகுதான் சிகிச்சைக்கு வந்தார். தொடக்கத்திலேயே சிகிச்சைக்கு வந்திருந்தால் இந்த 11 பேருக்கு தொற்று பரவியதை தடுத்திருக்கலாம்.

    எனவே, யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி போன்ற கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், மாவட்ட மருத்துவ உதவி மையம் அல்லது அருகில் உள்ள மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை உடனே தொடர்புகொள்ள வேண்டுகிறோம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்படி, தேவை இன்றி யாரும் வெளியில் வரவேண்டாம். மீறி வந்தால், கட்டாயம் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    Next Story
    ×