search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    ரூ.2 லட்சம் கேட்டு பள்ளி ஆசிரியையின் கணவர் கடத்தல்

    குடியாத்தம் அருகே ரூ.2 லட்சம் கேட்டு பள்ளி ஆசிரியையின் கணவர் மர்மகும்பலால் கடத்தப்பட்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் செதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிராஜ் என்கிற சிவராஜ் (வயது 49). இவருடைய மனைவி தில்ஷாத்பேகம். இவர், குடியாத்தம் நகராட்சி பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சிவராஜ் நேற்று காலை குடியாத்தத்தை அடுத்த நெட்டேரி கிராமத்தில் உள்ள நிலத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. மாலை 5 மணியளவில் தில்ஷாத்பேகத்தின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.

    அதில் மறுமுனையில் பேசிய மர்மநபர், உன்னுடைய கணவர் சிராஜை கடத்தி வந்துள்ளோம். ரூ.2 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம் எனக் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த தில்ஷாத்பேகம் குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வேலூர் சரக டி.ஐ.ஜி.காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குடியாத்தம், கே.வி.குப்பம், கரசமங்கலம், காட்பாடி, வேலூர் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    தில்ஷாத்பேகத்திடம் மர்மநபர் பேசிய செல்போன் எண்ணின் டவரை கண்காணித்து பல்வேறு இடங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இரவு 9 மணியளவில் சிராஜை கடத்திய கும்பல் பள்ளிகொண்டாவில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து சிராஜ் வீட்டுக்கு வந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×