search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்
    X
    வனத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்

    போராட்டம் நடத்திய வனத்துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்

    போராட்டம் நடத்திய வனத்துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வனத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வனத்துறை அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் முக கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வனத்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும்போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இந்தநிலையில் ஊரடங்கை மீறி போராட்டம் நடத்தியதாக ஊழியர்கள் மீது வனத்துறை அதிகாரி புகார் செய்தார். அதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வனத்துறை ஊழியர்களான லாரன்ஸ், கார்த்திகேயன், வாழுமுனி, அகில்தாசன், செந்தில்குமார், எம்.கார்த்திகேயன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஊழியர்கள் வனத்துறை அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று ஊழியர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    மேலும் அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி அங்கு வந்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஊழியர்களின் பிரச்சினையை தீர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
    Next Story
    ×