search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் கதிரவன்
    X
    கலெக்டர் கதிரவன்

    ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடைகள் இயங்காது - கலெக்டர் கதிரவன்

    ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடைகள் இயங்காது என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அனைத்துத்துறை உயர் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் காரணமாக நோய் தொற்றின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும்.

    பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும். வாகனங்களில் உரிய அனுமதியுடன் 2 நபர்கள் மட்டுமே பயணிப்பது குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வாகனங்களில் பயணிப்பவர்களும், பொது இடங்களுக்கு வருபவர்களும் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை கட்டாயப்படுத்தி உறுதிப்படுத்த வேண்டும். தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மிகவும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.

    பிற மாநிலம் மற்றும் மாவட்டம் அல்லது வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல்களை கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற செயலாளர், மாநகராட்சி மற்றும் நகராட்சி மண்டல அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 9677397600 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும்.

    மாவட்டத்திற்குள் புதிதாக வருபவர்களிடம் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொற்று அறிகுறிகளை கண்டறிந்து உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளாட்சி துறையின் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு நாளைக்கு 2 முறை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பினை வழங்கினால் மட்டுமே நோய் தொற்றின் தாக்கத்தினை குறைக்க இயலும்.

    ஈரோடு மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடைகள் இயங்காது. மேலும் வாரத்தின் இதர நாட்களில் மீன்களை வெட்டி சுத்தம் செய்யாமல் முழு மீன்களாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கோழி, ஆடு உள்ளிட்ட இதர இறைச்சி கடைகள் அனைத்து நாட்களிலும் இயங்கும். மேலும் பார்சல் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இறைச்சி கடைகளில் கிருமிநாசினி கொண்டு 3 முறை சுத்தம் செய்ய வேண்டும். கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் சோப்பு, கிருமிநாசினி கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

    அரசின் முக்கிய விதிமுறைகளான சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி, சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை கடைபிடிக்காத நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு அந்த நிறுவனங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
    Next Story
    ×