search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
    X
    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

    புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை முதல் நிறுத்தம்- அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

    கதிர்காமம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை முதல் நிறுத்தப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுகாதாரத்துறை பரிந்துரையின்பேரில் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஓட்டல்களில் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். அதன்பிறகு இரவு 8 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இந்த நடைமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தயாரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அளிக்க உள்ளோம். நாள்தோறும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மீண்டும் முற்றிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்ற உள்ளோம்.

    அங்கு தற்போது செயல்பட்டு வரும் நோயாளிகள் சிகிச்சை பிரிவு (ஓ.பி.டி.) நாளை (வியாழக்கிழமை) முதல் நிறுத்தப்படும். கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். இங்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் சட்டசபை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுவர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படும். கிராமப் புறங்களில் வெளியூரில் இருந்து வந்தவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க அந்தந்த கிராமத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பெண்கள், இளைஞர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×