search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணியை பரிசோதனை செய்த ரெயில்வே ஊழியர்
    X
    தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணியை பரிசோதனை செய்த ரெயில்வே ஊழியர்

    அரியலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடக்கம்- பயணிகள் மகிழ்ச்சி

    அரியலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அரியலூர்:

    கொரானா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதியில் இருந்து ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட ஊரடங்கில் தமிழகத்தில் நேற்று முதல் நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் மதுரையில் இருந்து விழுப்புரம் வரை தினந்தோறும் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பயணத்தை தொடங்கியது. அரியலூர் ரெயில் நிலையத்தில் 12 பயணிகள் விழுப்புரம் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்தினர்.

    ரெயில் நிலையத்திற்கு வருகை தந்த 10 பயணிகள் கிருமி நாசினி (சானிடைசர்) மூலம் கைகளை சுத்தப்படுத்திக்கொண்டனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல்நிலை பரிசோதனையை ரெயில்வே நிலைய அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனையடுத்து ரெயில்வே போலீஸ் அதிகாரி சவரிமுத்து தலைமையில், போலீசார் பயணிகளை சமூக இடைவெளிவிட்டு ரெயில் வரும் பிளாட்பாரத்திற்கு அழைத்து சென்று சமூக இடைவெளி விட்டு அமரச்செய்தனர். அரைமணி நேரம் தாமதமாக வந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் அனைவரும் ஏற்றிவிடப்பட்டனர்.

    இதுபோன்று மதுரை, திண்டுக்கல், மற்றும் திருச்சியில் இருந்து அரியலூருக்கு வருகை தந்த 52 பயணிகளும் சமூக இடைவெளியுடன் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் பயணச்சீட்டு மற்றும் இ-பாஸ் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ள ரெயில் சேவை மூலம் தங்களது பணிகளுக்கு திரும்ப முடிகிறது என்று ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் ரெயில் நிலையங்களில் சுகாதார முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் நாள் என்பதால் பயணிகள் போக்குவரத்து குறைவாக உள்ளது என்றும், நாளடைவில் அதிக அளவில் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×