search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்
    X
    நெல்

    விவசாயிகளிடம் இன்று முதல் நெல் கொள்முதல் தொடக்கம்- அமைச்சர் கமலக்கண்ணன்

    விவசாயிகளிடம் இன்று முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று புதுவை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று புதுவை, காரைக்கால் விவசாயிகளிடம் இருந்து 20 ஆயிரம் டன் அரசிக்கு தேவையான நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு, இந்திய உணவு கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி புதுவையில் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர், காரைக்காலில் தென்னங்குடியிலும் இன்று புதன்கிழமை முதல் ஆகஸ்டு 31-ந் தேதிவரை நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.

    இந்திய உணவு கழகம் வரையறுத்துள்ள விதிகளின்படி, விவசாயிகள் கொண்டு வரும் நெல் இந்த ஆண்டு அறுவடை செய்தவையாகவும், ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    நடப்பு பருவத்தில் அறுவடை செய்தததற்கு ஆதாரமாக, உழவர் உதவியக வேளாண் அதிகாரியின் சான்று சமர்பிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் நெல் தூற்றும் கருவி கொண்டு, விவசாயிகள் தங்கள் செலவில் தூற்றி எடுத்த பின், இந்திய உணவுக்கழகம் சன்ன ரகம் குவிண்டால் ரூ.1,835-க்கும், மோட்டா ரகம் ரூ.1,815க்கும் கொள்முதல் செய்யப்படும்.

    கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 2 நாளில் வரவு வைக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் பணிகளை ஒன்றிணைக்க, இந்திய உணவு கழகம் மற்றும்வேளாண் துறையின் விரிவாக்க அதிகாரிகள், களப்பணியாளர்கள் இருப்பர்கள்.

    விவசாயிகள் அனைவரும் கொள்முதல் நிலையத்திற்கு வரும்போது அவர்களது வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், உழவர் உதவிய வேளாண் அதிகாரியின் நடப்பு பருவ அறுவடைக்கான சான்று மற்றும் ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும்.

    அதிகமான நபர்கள் ஒரே நேரத்தில் கூடுதல் மற்றும் காத்திருத்தலை தவிர்க்க, விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்ய உள்ள நெல்லை நேரடி கொள்முதல் மையத்தில் முன்பதிவு செய்தல் நல்லது என இந்திய உணவு கழகம் அறிவுறுத்தி உள்ளது.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×