என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழை மரங்கள்
    X
    வாழை மரங்கள்

    சாகுபடியான வாழையை விற்க முடியாததால் விவசாயிகள் கவலை

    சாகுபடியான வாழையை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களுக்கு வாழையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கோடை காலத்தில் விவசாயிகள் அதிக அளவில் வாழையை பயிரிடுவர்.

    வழக்கம் போல் சந்தை புதுகுப்பம், கூடப்பாக்கம், திருக்கனூர், பாகூர், வில்லியனூர், கனகசெட்டிக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்து அறுவடைக்கு காத்திருந்தனர்.

    கோடை விடுமுறையை யொட்டி அதிகமாக திருமணம் மற்றும் கோவில் விழாக்கள் நடைபெறும். திருமண விருந்துக்காக வாழை இலை, வாழை காய், வாழை மரம், வாழைப்பழம் ஆகியற்றை வியாபாரிகள் வாங்கி செல்வர்.

    இந்த நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 4-வது முறையாக ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் திருமண விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் வாழையை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். வாகன போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களுக்கு வாழையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால், சில விவசாயிகள் வேறு வழியின்றி கால்நடைகளுக்கு உணவாக்கி வருகின்றனர். இன்னும் சிலர் நிலத்திற்கே உரமாக்கி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே புதுவை அரசு விவசாயிகளை நேரில் சந்தித்து நஷ்டத்தை கணக்கிட வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×