search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டோ
    X
    ஆட்டோ

    அரியலூர்-பெரம்பலூரில் ஊரடங்கில் தளர்வு இல்லாததால் ஆட்டோ, கார்கள் இயங்கவில்லை

    அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு இல்லாததால் ஆட்டோ, கார்கள் இயங்கவில்லை. இதனால் ஆட்டோ, கார் டிரைவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தது. இதனால் ஆரஞ்சு மண்டலத்திற்குள் இடம்பெற்றிருந்த 2 மாவட்டங்களும் பச்சை மண்டலத்திற்கு மாறும் நிலையும் ஏற்பட்டது.

    கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய தொழிலாளர்கள் மூலம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. முதலில் தொழிலாளி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படவே, சுதாரித்துக்கொண்ட சுகாதாரத்துறையினர் கோயம்பேடு சந்தையில் இருந்து வரும் தொழிலாளர்கள் அனைவரையும் மாவட்ட எல்லைகளில் மடக்கி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் பலருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனிடையே சுகாதாரத்துறையினரின் பிடியில் சிக்காமல் தொழிலாளர்கள் சிலர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். அவர்கள் மூலம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரவியது. அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்த மாவட்டங்களில் அரியலூர் 3-வது இடத்தையும் பிடித்தது. அந்த அளவுக்கு அங்கு வைரசின் தாக்கம் இருந்தது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு வரை அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 348 ஆக இருந்தது. இதில் 340 பேர் கோயம்பேடு தொழிலாளர்கள். நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 353 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 329 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புக்குள்ளான 139 நபர்களில் இதுவரை 30 பேர் சிகிச்சை பெற்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 109 பேர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது.

    இதனிடையே கடந்த 4-ந் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கில் சிலர் தளர்வுகள் செய்யப்பட்டது. அதன்படி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 34 வகையான வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டது. முக்கிய சேவைகளை அளிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கியது.

    கொரோனா வைரசின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும் கடைகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள் இயங்க தொடங்கியதால் வியாபாரிகள், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

    இருப்பினும் 2 மாவட்டங்களிலும் வைரசின் தாக்கம் கூடுவதும், குறைவதுமாக இருந்து வந்ததால் தொடர்ந்து சிவப்பு மண்டலத்திலேயே இடம் பெற்றுள்ளது.

    இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவினை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நேற்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திற்குள் இடம் பெற்றுள்ளதால் அந்த மாவட்டங்களில் ஏற்கனவே இருந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் தொடரும் என்றும், தளர்வுகள் ஏதும் இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்தது.

    இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது. மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் மாவட்டத்திற்குள் ஆட்டோ, கார்களை இ-பாஸ் இல்லாமல் இயக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆனால் அரியலூர்- பெரம்பலூர் மாவட்டத்திற்கு அந்த தளர்வு பொருந்தாது. இதனால் 2 மாவட்டத்திற்குள்ளும் ஆட்டோ, கார்களை இயக்க முடியவில்லை. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. முந்தைய கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்கிறது. இதனால் 2 மாவட்ட பொதுமக்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    குறிப்பாக ஆட்டோ- கார் டிரைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஆட்டோ- கார்களை இயக்காமல் உள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற மாவட்டங்களில் ஆட்டோ-கார்களை மாவட்டத்திற்குள் மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அரியலூர், பெரம்பலூர் மாவட்டம் சிவப்பு மண்டலத்திற்குள் இடம் பெற்றிருப்பதை காரணம் காட்டி இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது எங்களை மேலும் பாதிப்படைய செய்துள்ளது என்றனர்.

    Next Story
    ×