search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கடலூர் மாவட்டத்தில் டோக்கன் வாங்குவதற்கு குவிந்த மதுபான பிரியர்கள்

    டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டோக்கன் வாங்குவதற்கு மதுபான பிரியர்கள் குவிந்தனர்.
    கடலூர்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 143 டாஸ்மாக் கடைகள் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் 10 கடைகள் அமையபெற்று உள்ளது.இந்த கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் இன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

    இதையொட்டி காலை முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் பகுதியில் ஏராளமான குடி பிரியர்கள் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் 100 பேராக பிரித்து ஆங்காங்கே இட வசதிகளை ஏற்படுத்தி சமூக இடைவெளியில் அமர வைத்தனர். மேலும் முகம் கவசம் அணிந்திருக்க வேண்டும் என போலீசார் கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.

    காலை முதல் காத்துக்கொண்டிருந்த மது பிரியர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது போல் 500 டோக்கன்கள் மட்டும் வினியோகம் செய்ய தொடங்கப்பட்டது. இதில் குடிப்பிரியர்கள் போட்டாபோட்டி ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களிடத்தில் நேரடியாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது. இன்று கரு நீல வண்ண டோக்கன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை முதல் ஏராளமான குடிப்பிரியர்கள் திரண்டதால் உச்சநீதிமன்றம் அறிவித்தது போல் 500 டோக்கன்விறுவிறுப்பாக குடி பிரியர்கள் வாங்கி சென்றனர்.

    மேலும் 500 டோக்கன் வழங்கிய தகவல் அறிந்த குடிபிரியர்கள் அருகாமையிலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அவசர அவசரமாக சென்றதையும் காண முடிந்தது. இதுமட்டுமின்றி முதலில் 100 டோக்கன் வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அடுத்ததாக 100, 100 டோக்கன் ஆக வைத்திருப்பவர்கள் பத்து பத்து நபர்களாக அனுப்பி வைத்து மது பாட்டில்கள் வாங்க போலீசார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    காலை நேரத்தில் தாமதமாக வந்த குடிப்பிரியர்கள் டோக்கன் கிடைக்காததால் மிகுந்த மனவேதனையுடன் அங்கேயே காத்துக் கிடந்தனர். அவர்களை போலீசார் காரணமின்றி நின்று கொண்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் நேரம் செல்ல செல்ல குடி பிரியர்கள் அதிகமாகும் காரணத்தினால் பலத்த போலீஸ் பாதுகாப்பு மாவட்டம் முழுவதும் போடப்பட்டு உள்ளது.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் தலைமையில் கடலூர் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கடலூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வரலாற்றில் முதல் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இன்று காலை பலர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்குவதற்கு காத்து இருந்ததை காண முடிந்தது.

    Next Story
    ×