என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் விளையாடியவர்களை டிரோன் கேமிரா மூலம் கண்காணித்து விரட்டியடித்த போலீசார்.
    X
    கிரிக்கெட் விளையாடியவர்களை டிரோன் கேமிரா மூலம் கண்காணித்து விரட்டியடித்த போலீசார்.

    ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்- போலீசார் எச்சரித்து அனுப்பினர்

    சீர்காழியில் ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை டிரோன் கேமிரா மூலம் காண்காணித்து போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு மே 3-ந் தேதி வரை மத்திய, மாநில அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.

    அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் கால நிர்ணயம் செய்து திறக்கப்பட்டு வருகிறது.சீர்காழி போலீசார் தீவிரமாக கண்காணித்து ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

    சமூக இடைவெளியில்லாமல் மளிகை கடைகள், காய்கனி கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து வார்டுகளிலும் வண்ண அட்டைகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் வாரத்திற்கு 2 கிழமைகள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இவ்வளவு கட்டுப்பாடுகளையும் மீறி நகரில் சுற்றி திரிபவர் களையும், கூட்டம் சேர்ந்து விளையாடுபவர்கள், பேசிக் கொண்டிருப்பவர்களை கண்காணிக்க சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் வந்தனா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் (டிரோன் காமிரா) மூலம் சீர்காழி நகரின் நாள் முழுவதும் கண்காணித்தனர்.

    சீர்காழி புதிய, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதி சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களை தாழ்வாக டிரோனை பறக்க செய்து எச்சரித்தனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட பகுதிகளிலும் டிரோனை ஓடவிட்டு கண்காணித்தனர்.

    அதேபோல் சீர்காழி ஈசானியத் தெரு, எடமணல் கிராமப்பகுதி திடலில் கிரிக்கெட் விளையாடியவர்களை டிரோன் மூலம் காவலர்கள் கண்காணித்தனர். அப்போது கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் இதனை கண்டு மரத்தடியில் மறைந்து தப்பினர்.

    இருந்தும் டிரோனை தாழ்வாக பறக்கவிட்டு காவலர்கள் எச்சரித்தனர்.

    இதேபோல் திருமுல்லை வாசல் கடற்கரையில் கூடியிருந்த கூட்டத்தினையும் டிரோன் மூலம் கண்காணித்து போலீசார் விரட்டியடித்தனர். இதனால் சீர்காழியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×