search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி வரும் சுகாதார குழுவினர்.
    X
    செந்துறை பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி வரும் சுகாதார குழுவினர்.

    இஸ்லாமியர்கள் வசித்த பகுதியில் மருத்துவக்குழு தீவிர பரிசோதனை

    டெல்லி மாநாட்டிற்கு சென்றுவிட்டு செந்துறை வந்த இஸ்லாமியர்கள் வசித்த பகுதியில் மருத்துவக்குழுவினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    செந்துறை:

    சமீபத்தில் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டிற்கு சென்றுவந்த பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இறந்ததாக விசாரனையில் தெரிய வந்தது. 

    இதனையடுத்து உளவுப் பிரிவு அதிகாரிகள் தந்த தகவலின் பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின் பேரில் செந்துறையைச் சேர்ந்த 3 பேர், அரியலூர் எருத்துக்காரன்பட்டி சிமெண்ட் ஆலை ஊழியர் மற்றும் திருமானூரைச் சேர்ந்த தலா ஒருவர் என 5 பேரை அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். 

    இவர்களது ரத்த மாதிரி திருச்சிக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் வசித்த திருமானூர், எருத்துக்காரன் பட்டி மற்றும் செந்துறை ஆகிய மூன்று இடங்களிலும் மருத்துவகுழுவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி செந்துறை வட்டார மருத்துவ அலுவலர் இந்துமதி தலைமையில் டாக்டர் ரேவதி உட்பட ஒவ்வொரு குழுவிலும் தலா ஒருமருத்துவர், இரண்டு சுகாதார செவிலியர் மற்றும் நான்கு அங்கன்வாடி பணியாளர்கள் என 7 பேர் கொண்ட குழு தலா 50 வீடுகளை கண்காணிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த மருத்துவகுழுவினர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா என்று கேட்டறிந்து வருகின்றனர். மூன்று இடங்களிலும் சுமார் 5 ஆயிரம் வீடுகளில் உள்ள 20 ஆயிரம் மக்களிடையே இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பின்போது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களது வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரின் வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கைகழுவும் முறைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது. 14 நாட்களுக்கு இந்த தொடர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள மருத்துவகுழுவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×