search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேலூர் அருகே வீடு புகுந்து கணவன், மனைவியை தாக்கி நகை, பணம் கொள்ளை நள்ளிரவில் முகமூடி கும்பல் அட்டூழியம்

    ஒடுகத்தூர் அருகே வீடு புகுந்து கணவன், மனைவியை தாக்கி நகை, பணத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓட்டேரி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி கலா.

    சீனிவாசன் நேற்று ஒடுகத்தூரில் நடந்த வாரச்சந்தையில் அவர்ளுக்கு சொந்தமான 7 ஆடுகளை விற்பனை செய்தார்.

    இதன் மூலம் ரூ. 70 ஆயிரம் பணம் கிடைத்தது. அதனை வீட்டிற்கு கொண்டு வந்தார். இரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டினர். பின்னர் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    சத்தம் கேட்டு சீனிவாசன் கண்விழித்தார். முகமூடி அணிந்த 6 பேரை கண்டதும் அவர் திடுக்கிட்டு சத்தம் போட முயன்றார்.

    அதற்குள் சீனிவாசனை கும்பல் சரமாரியாக தாக்கினர். அவரது தலை, கை, கால் என அனைத்து பகுதியிலும் அடி விழுந்தது. படுகாயமடைந்த அவர் தரையில் சரிந்து விழுந்தார்.

    அவரை எழுந்திருக்க முடியாதபடி தாக்கினர். அதை தடுக்க முயன்ற கலாவையும் கீழே தள்ளி அடித்தனர்.

    இதில் தம்பதி இருவரும் மயக்கம் அடைந்தனர். கும்பல் கலா அணிந்திருந்த தாலி செயின், கம்மல் உள்பட 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ஆடு விற்பனை செய்து வைத்திருந்த ரூ 70 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலையில் சீனிவாசன் வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது தம்பதியினர் மயக்கமாக கிடந்தது தெரியவந்தது.

    அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுபற்றி வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒடுகத்தூரில் நடந்த வெள்ளிக்கிழமை சந்தையில் சீனிவாசன் ஆடு விற்பனை செய்ததை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அவரது வீட்டில் பணம் இருப்பதை தெரிந்து துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் கொள்ளை கும்பல் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கி நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×