search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரனூர் சுங்கச்சாவடி
    X
    பரனூர் சுங்கச்சாவடி

    பரனூர் சுங்கச்சாவடியில் உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

    பரனூர் சுங்கச்சாவடியில் உளவுத்துறை டி.எஸ்.பி. பிரதீப்குமார் மற்றும் போலீசார் சூறையாடப்பட்ட அலுவலக அறைகளை பார்வையிட்டு சேதமதிப்புகளையும் ஆய்வு செய்தனர்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26-ந்தேதி நள்ளிரவு அதன் ஊழியர்களுக்கும் அரசு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மற்ற பஸ் டிரைவர்களும் அவருக்கு ஆதரவாக குதித்து தங்களது பஸ்களை குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகளும் ஆதரவு தெரிவித்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அலுவலகத்தில் இருந்த மின் சாதன பொருட்கள், கேபிள்கள் உள்ளிட்ட அனைத்தும் சேதம் அடைந்தது.

    இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் நாராயணன், சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சுங்கச்சாவடியை சேதப்படுத்தியவர்களை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

    சுங்கசாவடியை பஸ் பயணிகள் நொறுக்கியபோது ரூ.18 லட்சம் பணம் மாயமாகி இருப்பதாக மேற்பார்வையாளர் விஜயபாபு என்பவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே சுங்கச்சாவடியில் மோதலுக்கான காரணம் குறித்து உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கி உள்ளனர். இன்று காலை உளவுத்துறை டி.எஸ்.பி. பிரதீப்குமார் மற்றும் போலீசார் பரனூர் சோதனை சாவடிக்கு வந்தனர். அவர்கள் சூறையாடப்பட்ட அலுவலக அறைகளை பார்வையிட்டனர். சேதமதிப்புகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி ஊழியர்களின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தனர். சுமார் 2 மணி நேரம் சோதனைச்சாவடியில் உளவுத்துறை போலீசார் ஆய்வு செய்தனர்.

    சுங்கச்சாவடி முழுவதும் சேதமடைந்ததையடுத்து இன்று 4-வது நாளாக வாகனங்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக சென்றன.
    Next Story
    ×