search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனி பொழிவு
    X
    பனி பொழிவு

    ஊட்டியில் கடுங்குளிர் வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரியாக குறைந்ததால் தண்ணீர் பனிகட்டியானது

    ஊட்டி அருகே உள்ள புகர் என்ற பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரி செல்சியசாக குறைந்ததால் தண்ணீர் பனிகட்டியானது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக பனி காலம் நவம்பர் மாதத்தில் தொடங்கும். இந்த ஆண்டு மழை காரணமாக டிசம்பர் மாதம் பிற்பகுதியில் பனி காலம் தொடங்கியது. தற்போது உறைபனி காலமாக மாறியுள்ளது. இந்த கடும் பனி காலம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

    ஊட்டி நகர பகுதியில் நேற்று காலை அதிகபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 1 டிகிரி செல்சியசாகவும் பதிவானது. நகரில் பிற பகுதிகளில் 3 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.

    ஊட்டி அருகே உள்ள புகர் என்ற பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரி செல்சியசாக குறைந்தது. இதனால் பாசன குழாய்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகியுள்ளது. வெப்ப நிலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் இந்த பகுதியில் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் மாலை நேரத்திலேயே குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகள் வெறிசோடி காணப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையோரம் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

    கடும் பனியால் சில தேயிலைச்செடிகள், காய்கறி மற்றும் மலர்ச்செடிகள் கருகி வருகிறது.

    புல்வெளிகள் வெண்பட்டு போர்த்தியது போன்று பனி கொட்டியது. காஷ்மீர் மலைத்தொடர்போல் நீலகிரி காட்சி அளிக்கிறது. தோட்டத்தொழிலாளர்கள் கம்பளி அடை அணிந்து வேலை பார்த்து வருகிறார்கள். வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர். பொரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வெப்ப நிலை மைனஸ் 5 டிகிரி செல்சியாக குறைந்ததால் குழந்தைகள், முதியவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் டீசல் உறைந்து விடுவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் தங்கும் விடுதி மற்றும் ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    பனி படர்ந்த இயற்கை சூழலை பார்க்க சில சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் மட்டுமே மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று புல்வெளியில் படர்ந்துள்ள உறைபனியை கண்டு ரசித்து வருகிறார்கள்.

    குன்னூரில் உறைபனியால் இரவு நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் பதிவாகிறது. வெலிங்டன் ஜிம்கானா, எடப்பள்ளி, பந்துமை, பகாசுரன் மலை அடிவாரப்பகுதிகளில், உறைபனியால் கடந்த 2 நாட்களாக, இரவு நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
    Next Story
    ×