search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தியிடம் வேட்பாளரின் கணவர் மதியழகன் மனு அளித்த போது எடுத்த படம்.
    X
    கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தியிடம் வேட்பாளரின் கணவர் மதியழகன் மனு அளித்த போது எடுத்த படம்.

    பெண் வேட்பாளரின் கணவருக்கு கொலை மிரட்டல்- பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு

    பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு அளித்தார்.

    கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குண்டு உப்பலவாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மதியழகன் என்பவரின் மனைவி சாந்தி போட்டியிட்டார். இவர் 145 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்பவர் தோல்வி அடைந்தார்.

    வெற்றி பெற்ற வேட்பாளரின் கணவர் மதியழகனை பார்த்து ஒரு கும்பல், நீ கிராமத்துக்குள் எப்படி வருகிறாய்? என்று பார்ப்போம், ஊருக்குள் வந்தால் உன்னை வெட்டி விடுவோம் என மிரட்டினர்.

    இதனால் மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயந்து விட்டனர். இரவு 11 மணிக்கு மேல் கிராமத்துக்கு செல்லாமல் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதற்காக இங்கே இருக்கிறீர்கள்? வெற்றி பெற்ற பிறகு வெளியில் செல்ல வேண்டியதுதானே என்று கூறினர். அப்போது நடந்த சம்பவத்தை மதியழகன் போலீசாரிடம் தெரிவித்தார்

    இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தியிடம் பாதுகாப்பு கோரி மதியழகன் புகார் மனு அளித்தார். இதையடுத்து மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்களை 5 போலீசாருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார். ஆனால் தொடர்ந்து பயத்தால் அவர் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கினார். காலையில் போலீஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

    தேர்தலில் வெற்றி பெற்றும் கிராமத்திற்கு செல்ல அச்சப்பட்டு இரவு விடிய விடிய வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளரின் கணவர் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×