search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
    X
    கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    சென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    திருவொற்றியூர்:

    வடசென்னையில் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மீஞ்சூர் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி நிலையங்களும் உள்ளன.

    இந்த தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம்கிடைக்கும் குடிநீரை இதுவரை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் இந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து வரக்கூடிய குடிநீரை முழுமையாக மக்களுக்கு பயன்படுத்த அரசு திட்டமிட்டது.


     
    இதற்கு மாற்று ஏற்பாடாக குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து அதன் மூலம் வரக்கூடிய நீரை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க அரசு திட்டமிட்டது.

    இதற்காக கொடுங்கையூரில் ரூ.348 கோடியில் 8 ஏக்கர் பரப்பளவில் 3-ம் நிலை கழிவுநீர் எதிர் சவ்வூடு பரவல் முறை மூலம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் உள்ள கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து குழாய் மூலம் 220 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கொடுங்கையூர், வழுதலைமேடு பிரதான சாலையில், உள்ள 3-ம் கட்ட கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    இதன் மூலம் தினமும் சுத்திகரிக்கப்படும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர், மணலி, எண்ணூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 11 மத்திய, மாநில அரசு தொழிற்சாலைக்கு 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், 80 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு 24 கிலோ மீட்டர் தூரம் அனுப்பப்பட உள்ளது.

    தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முழுமையாக நிறைவடைந்ததையொட்டி இதன் தொடக்கவிழா கொடுங்கையூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

    விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைமைச் செயலாளர் சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங், மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் வரவேற்றனர்.

    முன்னதாக விழா சிறப்பு மலரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்று கொண்டார்.
    Next Story
    ×