search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து போலீசார் லைசென்சை சரிபார்த்தபோது எடுத்தபடம்
    X
    போக்குவரத்து போலீசார் லைசென்சை சரிபார்த்தபோது எடுத்தபடம்

    வாகன விதிமீறல் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது

    வாகன விதிமீறல் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இதன்படி டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
    சென்னை:

    நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

    குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    இதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு விதி மீறல்களுக்கான அபராத தொகையை பலமடங்கு உயர்த்தி உள்ளது. இதன்படி டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இனி ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். முன்பு இந்த அபராத கட்டணம் ரூ.500 ஆகவே இருந்தது.

    குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராத தொகை இப்போது ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    டாஸ்மாக்

    டாஸ்மாக் மதுக்கடைகளில் சென்று மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

    டாஸ்மாக் மதுக்கடையில் குவார்ட்டர் மதுவின் குறைந்தபட்ச விலை ரூ.105 ஆகும். அதிகபட்சமாக ரூ.300 வரையில் குவார்ட்டர் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மதுக்கடைகளில் குடிக்கும் கூலித் தொழிலாளிகள் பலர் குவார்ட்டர் பாட்டிலை வாங்கி அப்படியே ராவாக அடித்துவிட்டு மோட் டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு செல்வார்கள்.

    இப்படி 100 ரூபாய்க்கு மது குடித்துவிட்டு செல்பவர்கள் சிக்கினால் அபராதம் ரூ.10 ஆயிரம் கட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் லைசென்ஸ் இல்லாமல் போதையில் ஓட்டினால் ரூ.15 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் உஷாராக இருந்தால் மட்டுமே இந்த அபராதம் விதிப்பில் இருந்து தப்ப முடியும்.

    ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்து வந்தனர். இனி ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.

    விபத்து ஏற்படுத்துவது போல ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிக எடைக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது . இனி 2000 ரூபாய் அபராதம். விதிக்கப்பட உள்ளது.

    18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அதன் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறைத்தண்டனையும் கிடைக்கும்.

    அதிவேகமாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டினால் தண்டனையாக 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். இரண்டாவது முறையும் சிக்கினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ .10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

    வாகனம் ஓட்டுவதற்கு தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட முதல் முறை ரூ .1000 வரையிலும், இரண்டாவது முறை ரூ .2,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

    ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகளுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். இந்த விதிமீறலில் போலீசார் ஈடுபட்டால் 2 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.

    விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் கிடைக்கும் வகையிலும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அபராதத்தொகை இன்று முதல் அதிரடியாக அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே சென்னையில் அபராத கட்டண உயர்வு கடந்த மாதமே அமலாகி விட்டது குறிப்பிடத்தக்கது. இதன்படி சென்னையில் லைசென்சு இன்றி குடிபோதையில் வாகனம் ஓட்டிய விஷ்வா என்ற வாலிபருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் சிக்குபவர்களை போக்குவரத்து போலீசார் மொபைல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள். கோர்ட்டே அவர்களுக்கு அபராதம் விதிக்கும். அந்த வகையில் எழும்பூர் கோர்ட்டு இந்த அபராதத்தை விதித்துள்ளது.

    இதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தோஷ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×