என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு எழில்நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கே பிளாக்கில் 6வது மாடியில் வசித்து வரும் பிரகாஷ் வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து பீரோவில் இருந்த 5.5 சவரன் தங்க நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும், ஒரு உண்டியலை உடைத்தும் கொள்ளையடித்துள்ளனர்.

    பிளாக்கில் 1-வது மாடியில் வசித்து வந்த ராஜா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த 5 பட்டு புடவைகளை திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் முதல் தளத்தில் வசிக்கும் கிரிஸ்டீனா என்பவர் வீட்டின் ஜன்னலை திறந்து ஜன்னல் வழியாக ஒரு செல்போனை திருடி இருக்கிறார்கள்.

    முதல் தளத்தில் வசிக்கும் மாரிமுத்து என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில் எதுவும் கிடைக்காததால் பீரோவை சேதப்படுத்தி, கண்ணாடியையும் உடைத்து சென்றுள்ளனர்.

    2-வது தளத்தில் வசிக்கும் மதுரை என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளனர்.

    எப்.பிளாக்கில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கடையை உடைத்து சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    2 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வரவும் இல்லை, அதேபோல் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் யாரும் வந்து தடயங்களை பதிவு செய்யவில்லை என இந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    தாங்கள் வசிக்கும் பகுதி குடிசை மாற்று வாரியத்தால் வழங்கப்பட்டது என்பதால் குற்றப்பிரிவு போலீசார் எங்களை அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.

    இதுவே வசதி படைத்தவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருந்தால் காவல்துறை உயர் அதிகாரிகள், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் என முக்கியத்துவம் கொடுத்து புலன் விசாரணை மேற்கொண்டிருப்பார்கள்.

    இனியாவது குற்றவாளிகளை கண்டு பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×