search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2,300 லஞ்சம் வாங்கிய வணிக உதவியாளர் கைது
    X

    சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2,300 லஞ்சம் வாங்கிய வணிக உதவியாளர் கைது

    பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணியை சேர்ந்த பெண் ஒருவர், புதிய மின் இணைப்பு வேண்டி, சோழசிராமணியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு கடந்த வாரம் சென்றார். அங்கு அவரிடம், புதிய மின் இணைப்பு வழங்க, வணிக உதவியாளர் கார்த்திக் ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் கேட்டுள்ளார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த பெண், நாமக்கல் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கார்த்திக்கை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று காலையில் அந்த பெண்ணிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அவரும் அவர்கள் கொடுத்த ரூ.2 ஆயிரத்து 300-ஐ சோழசிராமணியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.

    அங்கு அந்த பெண் லஞ்ச பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்தார். அப்போது அலுவலகம் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்திற்குள் புகுந்து லஞ்சம் வாங்கிய கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதுடன், அங்கிருந்த சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    புதிய மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலக வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் சோழசிராமணியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    Next Story
    ×