search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் 2 மடங்கு உயர்வு
    X

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் 2 மடங்கு உயர்வு

    அண்ணா பல்கலைக்கழகம் வரும் கல்வி ஆண்டில் கல்வி கட்டணத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளது. #AnnaUniversity
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கடைசியாக 1999-ம் ஆண்டு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஊழியர்களின் சம்பளம், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கு புதிய உபகரணங்களை வாங்குதல் போன்ற காரணங்களால் செலவுகள் அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவே கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறுகையில், ‘‘எந்தவொரு கல்வி நிறுவனத்துக்கும் கல்வி கட்டணம் உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. ஐ.ஐ.டி. நிறுவனத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரமாக இருந்தது. தற்போது அங்கு கல்வி கட்டணம் ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ளது’’ என்றார்.



    கட்டண உயர்வுக்கு பிறகும் கூட தற்போதுள்ள கட்டணம் மற்ற தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களை விடவும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இருப்பதைவிடவும் குறைவாகத்தான் உள்ளது என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய கட்டணத்தின்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுய உதவி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் ரூ.14 ஆயிரத்து 665-ல் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கான கட்டணம் ரூ. 9 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.21 ஆயிரம் ஆகவும் மற்ற பல்வேறு படிப்புகளுக்கான கட்டணம் ரூ.8 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.

    மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்வி கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். ஆனால் நாங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    பல்கலைக்கழகத்தில் குடிநீர் மற்றும் மின்சாரத்துக்கான செலவுகள் அதிகரித்துவிட்டன. இதே போல பாதுகாப்பு மற்றும் ஆய்வகத்தில் பல்வேறு வசதிகளை செய்தல் போன்றவற்றாலும் செலவுகள் உயர்ந்துள்ளது. ஏற்கனவே மாநில அரசு பல்கலைக் கழகத்துக்கு வழங்கிய நிதியை 2012-2013-ம் ஆண்டில் இருந்து நிறுத்திவிட்டது.

    தற்போது உயர்க்கல்வித்துறை உதவியுடன் சில முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதன்படி நெல்லை, கோவை, மதுரை மண்டலங்களில் புதிய படிப்புகளை தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
     
    இவ்வாறு அவர்கள் கூறினர். #AnnaUniversity
    Next Story
    ×