search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்களில் யாகம் நடத்தியதால் எவ்வளவு மழை பெய்தது?- அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்டு மனு
    X

    கோவில்களில் யாகம் நடத்தியதால் எவ்வளவு மழை பெய்தது?- அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்டு மனு

    கோவில்களில் யாகம் நடத்திய பிறகு எந்தெந்த ஊர்களில் எவ்வளவு மழை பெய்தது என்று அறநிலையத்துறையிடம் விளக்கம் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. #VarunaYagam
    சென்னை:

    தமிழகம் முழுவதும் வான்மழை பொய்த்து மக்கள் தண்ணீருக்காக திண்டாடுகிறார்கள். மனிதன் தீர்க்க முடியாத நெருக்கடிக்குள் சிக்கும் போது கடவுளே காப்பாற்று என்று முறையிடுவார்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் இந்த உணர்வு இருக்கும்.

    அதன்படி இந்து கோவில்களில் மழையை தருவிக்கும் பதிகங்கள், ராகங்கள், மூலம் பிரார்த்தனைகள், யாகங்கள் நடத்தும்படி அறநிலையத்துறை உத்தரவிட்டது. கோவில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த துறையே இதற்கான ஏற்பாடுகளை செய்தது.

    இந்த உத்தரவுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. அரசாங்கம் மதசார்பற்றது. அது எப்படி இவ்வாறு நடத்துவதை ஊக்குவிக்கலாம் என்று விமர்சித்தனர்.



    இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. பக்தர்களின் நம்பிக்கை, வழிபாட்டு முறையை அரசால் செயல்படுத்த முடியாவிட்டால் அறநிலையத்துறை கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கருப்பணசாமி என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அறநிலையத்துறைக்கு ஒரு மனு அனுப்பி இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-

    யாகம் செய்தால் மழை வரும் என்ற விதி மற்றும் அரசாணையின் நகல்களை அளிக்க வேண்டும். மேலும் கோவில்களில் யாகம் நடத்திய பிறகு எந்தெந்த ஊர்களில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரங்கள் தேவை.

    மழை வேண்டி கோவில்களில் யாகம் நடத்த எவ்வளவு செலவானது? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்துள்ளது.

    யாக பலனே மழையை தருவிப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். #VarunaYagam
    Next Story
    ×