search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் தற்கொலை செய்த போலீஸ்காரர்
    X

    காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் தற்கொலை செய்த போலீஸ்காரர்

    காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நித்திரவிளையை அடுத்த நடைக்காவு, பாறையடியை சேர்ந்தவர் அஜின்ராஜ்(வயது 26).

    நெல்லை மாவட்டம் மணி முத்தாறு 9-வது பட்டாலியனில் வேலை பார்த்த அஜின் ராஜூக்கு கோதையாறு நீர் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

    கோதையாறு நீர் மின் நிலையத்தில் போலீசார் தங்கும் ஓய்வு அறையில் நேற்று அஜின்ராஜ் தங்கி இருந்தார். திடீரென அவர் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நீர் மின் நிலைய ஊழியர்கள் சத்தம் கேட்டு அங்கு ஓடிச் சென்றனர்.

    அங்கு அஜின்ராஜ் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். அவர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    அஜின்ராஜ் தற்கொலை செய்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் கோதையாறு சென்று அஜின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவுக்கு காரணம் என்ன? என்றும் விசாரித்தனர்.

    இதற்காக அஜின்ராஜின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அவர் கடைசியாக யாரிடம் பேசினார்? எப்போது பேசினார்? என்பதை கண்டறியும் பணி நடந்தது.

    இதற்கிடையே அஜின்ராஜ் தற்கொலை செய்தது குறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜின்ராஜிக்கும், அவரது ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் இருந்தது தெரிய வந்தது.

    அஜின்ராஜ், போலீஸ் வேலையில் சேர்ந்த பின்பு காதலியை புறக்கணித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக காதலி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் அஜின்ராஜை அழைத்து விசாரித்தனர்.

    அஜின்ராஜ், காதலியை 6 மாதம் கழித்து திருமணம் செய்வதாக கூறியுள்ளார். 6 மாத கெடு முடிவடையும் நிலையில் காதலி, அஜின்ராஜை தொடர்பு கொண்டு உள்ளார். காதலியிடம் அஜின்ராஜ் நேற்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    அஜின்ராஜின் காதலி நேற்று திருமணத்திற்காக ஊரில் காத்திருந்தார். அஜின்ராஜ் நீண்ட நேரமாகியும் ஊருக்கு வராததால் அவரது காதலி, உறவினர்களுடன் களியக்காவிளை போலீஸ் நிலையம் சென்றார். அங்கு காதலன் தன்னை திருமணம் செய்ய வராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். போலீசார் மாணவியின் காதலனான அஜின்ராஜை தேடினர்.

    அப்போது அவர் கோதையாறு நீர் மின் நிலையத்தில் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த தகவலை போலீசார் காதலியிடம் தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர் கதறி அழுதார்.

    இது பற்றி களியக்காவிளை போலீசார், அஜின்ராஜ் தற்கொலை வழக்கை விசாரிக்கும் பேச்சிப்பாறை போலீசாருக்கு தெரிவித்தனர்.

    அஜின்ராஜ் காவல் பணியில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டதால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யாஅறி இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

    அஜின்ராஜ் தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    Next Story
    ×