search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனந்தபுரி-முத்துநகர் எக்ஸ்பிரஸ் நடுவழியில் ஒருமணி நேரம் நிறுத்தம்
    X

    அனந்தபுரி-முத்துநகர் எக்ஸ்பிரஸ் நடுவழியில் ஒருமணி நேரம் நிறுத்தம்

    எழும்பூர் நோக்கி வந்த அனந்தபுரி மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
    தாம்பரம்:

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று மாலை நடக்கிறது. இதில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

    அடையாறில் தங்கி இருந்த அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தனி ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

    திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயிலில் அவர் தடா சென்று பின்னர் மீண்டும் தனி ரெயிலில் சென்னை திரும்ப பயணத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. அவர் பயணம் செய்வதற்காக தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் தனி ரெயில் திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

    ஆனால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரசும், திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரசும் எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 7 மணிக்கு தாம்பரம் நிலையம் வந்து சேர்ந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட சிக்னல் கொடுக்கப்படவில்லை.

    வெங்கையாநாயுடு செல்ல வேண்டிய தனி ரெயில் புறப்பட தாமதம் ஆனதால் முத்துநகரும், அதனை தொடர்ந்து வந்த அனந்தபுரி எக்ஸ்பிரசும் தாம்பரத்தில் நிறுத்தப்பட்டன. தனி ரெயில் எழும்பூர், சென்ட்ரல் வழியாக செல்ல வேண்டும் என்பதால் அதே வழித்தடத்தில்தான் முத்துநகரும், அனந்தபுரியும் வர வேண்டியது இருந்தது. இதனால் 2 ரெயில்களும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டன.

    மேலும் எழும்பூர் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தப்பட்டால் அந்த வழியாக தனி ரெயில் செல்ல வழி கிடையாது என்பதால் தென் மாவட்ட ரெயில்கள் இரண்டையும் தாம்பரத்தில் நிறுத்தி விட்டனர்.

    துணை ஜனாதிபதி பயணம் தாமதம் இல்லாமல் தொடங்கி இருக்குமானால் முத்துநகர், அனந்தபுரி ரெயில்கள் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. ஆனால் அவர் செல்லக்கூடிய தனி ரெயில் 7.50 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது. அதனால் தாம்பரத்தில் நிறுத்தப்பட்ட 2 ரெயில்களிலும் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    சிலர் மின்சார ரெயில்களில் ஏறி வீட்டிற்கு சென்றனர். வயதானவர்கள், குழந்தையுடன் வந்தவர்கள் மட்டுமே அந்த ரெயில்களில் காத்து கிடந்தனர்.
    Next Story
    ×