என் மலர்
செய்திகள்

வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் குடிநீரின்றி தவிக்கும் பயணிகள்
வத்தலக்குண்டு:
கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, குமுளி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு வத்தலக்குண்டு பஸ் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது.
தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் வசதிக்காக பஸ்நிலையத்தில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அந்த சின்டெக்ஸ்தொட்டி தண்ணீர் இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் தண்ணீர் கிடைக்காமல் பஸ்நிலையத்தில் தவித்து வருகின்றனர். அம்மா குடிநீர் பாட்டிலும் குறைந்த அளவே வருவதால் வேகமாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனை பயன்படுத்தி கடைக்காரர்கள் குடிநீர் பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் தடையின்றி மதுபானங்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் குடிநீருக்காக அலைந்து திரிவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவர்கள் மயக்கமடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாதது சுற்றுலா பயணிகளை தவிப்புக்குள்ளாகி வருகிறது.
மேலும் இலவச கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே பஸ்நிலையத்தில் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.