search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசு வீட்டில் லேப்டாப், செல்போன்கள் சிக்கின - போலீஸ் காவலில் விசாரிக்க மனு
    X

    திருநாவுக்கரசு வீட்டில் லேப்டாப், செல்போன்கள் சிக்கின - போலீஸ் காவலில் விசாரிக்க மனு

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு வீட்டில் லேப்டாப், செல்போன்கள் மற்றும் பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டன. #PollachiAbuseCase #PollachiCase

    சென்னை:

    பொள்ளாச்சி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாலியல் வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் திருநாவுக்கரசு, அவரது நண்பர்கள் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஐ.ஜி.ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், இதன் காரணமாக ஒருவரை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார்.

    இதன்படி நேற்று முன்தினம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்றுமுன்தினம் மாலையில் பிறப்பித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு விசாரணையை விரைவில் தொடங்க உள்ளார்.

     


    இருப்பினும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பொள்ளாச்சியிலேயே முகாமிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    இந்தவழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருநாவுக்கரசின் வீடு ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம் அந்த வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் டி.எஸ்.பி. முத்துசாமி, 2 பெண் இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழுவினர் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசின் இன்னொரு வீட்டிலும் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    வீட்டில் திருநாவுக்கரசின் அம்மா லதா, பாட்டி, பெரியம்மா ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வீடுகளில் அனைத்து அறைகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு லேப்-டாப், 2 செல்போன்கள், பென்- டிரைவ் ஆகியவை சிக்கியது. வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    லேப்-டாப் மற்றும் பென்- டிரைவில் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? அல்லது அழிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்துள்ளார். வட்டி கொடுக்காதவர்களின் வீட்டுக்கு சென்று குடும்பபெண்களை மிரட்டி அவமானப்படுத்தி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யார்- யார்? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. திருநாவுக்கரசின் வீட்டில் சோதனை நடைபெற்ற போது,50 மீட்டர் சுற்றுளவுக்கு பொதுமக்கள் யாரையும் போலீசார் நடமாடவிடவில்லை.

    கைதான திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக இன்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது இதில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாங்கள் நடத்திவரும் விசாரணை விவரங்களையும், கைப்பற்றப்பட்ட ஆதாரங்களையும் விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    பாலியல் வழக்கை விசாரிப்பதற்காக விரைவில் சி.பி.ஐ.யில் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். #PollachiAbuseCase #PollachiCase

    Next Story
    ×