search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் முதல் நாளிலேயே வாகன சோதனையில் ரூ.3.73 லட்சம் சிக்கியது
    X

    சேலத்தில் முதல் நாளிலேயே வாகன சோதனையில் ரூ.3.73 லட்சம் சிக்கியது

    சேலத்தில் முதல் நாளிலேயே வாகன சோதனையில் ரூ.3.73 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம் மேற்கு தாசில்தார் வள்ளி தலைமையிலான பறக்கும் படையினர் சேலம் திருவாக்கவுண்டனூர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த காரில் ரூ.3 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காரில் வந்த ஈரோட்டை சேர்ந்த சண்முகம் (வயது 50) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மருத்துவ மனையில சேர்த்துள்ள தாயின் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து நண்பரிடம் அந்த பணத்தை வாங்கி வந்ததாக கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதுகுறித்து தாசில்தார் வள்ளி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ரோகிணிக்கு தகவல் தெரிவித்தார். உடனே கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் போதிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். பணத்தை கொண்டு வந்தவர் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் கூறினார்.

    இதேபோல் வீரபாண்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த காரை மறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.73 ஆயிரம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரை ஓட்டி வந்த சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 59) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பவர்லூம் வைத்திருப்பதாகவும், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அவரிடம் ஆவணங்கள் ஏதும்இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் 33 பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வியாபாரிகள் தொழில் அதிபர்கள் அத்தியாவசிய தேவைக்குகூட பணத்தை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    Next Story
    ×