search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
    X

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகிக்கப்படுறது.

    சுமார் 25 வருடங்குளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லாமல் நேரடியாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிட்டி வாக்கம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் சப்ளை சரியாக இல்லாதால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி இன்று காலை பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×