search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடநாடு கொள்ளை வழக்கு - ஜாமீன் ரத்தானதால் சயான், வாளையார் மனோஜை கைது செய்ய போலீசார் தீவிரம்
    X

    கொடநாடு கொள்ளை வழக்கு - ஜாமீன் ரத்தானதால் சயான், வாளையார் மனோஜை கைது செய்ய போலீசார் தீவிரம்

    கொடநாடு கொள்ளை வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #Kodanadissue #Sayan #Manoj

    ஊட்டி:

    கொடநாடு பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி புகுந்த கொள்ளை கும்பல் காவலாளியை கொலை செய்து விட்டு, பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

    இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூசாமுவேல் முன்னிலையில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் பேட்டி அளித்தனர். அப்போது கொள்ளை வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் பற்றி அவதூறு பரப்பியாக சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் டெல்லியில் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால் அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்து விட்டார்.

    இந்நிலையில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என ஊட்டியை சேர்ந்த அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 2-ந் தேதி நடந்தது.

    அப்போது அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டு தலைமை அரசு வக்கீல் நடராஜ் ஆஜரானார். சயான் மற்றும் வாளையார் மனோஜ் சார்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜரானார். சுமார் 5 மணி நேரம் இரு தரப்பினரும் நீதிபதி முன் காரசாரமாக வாதாடினர். அதன்பின் 8-ந் தேதி இந்த வழக்கு தொடர்பாக உத்தரவு வெளியிடப்படும் என நீதிபதி வடமலை தெரிவித்தார்.

    நேற்று சயான், வாளையார் மனோஜ், திபு, பிஜின் ஆகிய 4 பேர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. மனோஜ்சாமி, ஜித்தின் ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி ஆகிய 6 பேர் கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வதாகவும், கோர்ட்டில் ஆஜராகாத பிஜின், திபு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி கூறினார். மேலும் சயான், வாளையார் மனோஜ், பிஜின், திபு ஆகிய 4 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×