search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி- உலக முதலீட்டாளர் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி- உலக முதலீட்டாளர் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

    தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #GIM2019 #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அதில் 98 திட்டங்கள் ஒப்பந்தம் போடப்பட்டன. 3 முதல் 7 வருடங்கள் தொழில் நிறுவனங்கள் வருகைக்காக நிர்ணயிக்கப்பட்டன, அதன் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு கிடைத்தன. முதல் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்கள், உற்பத்தியை தொடங்குவதற்கான செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தொழில் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுகிறது.

    இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம் தமிழகம். சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகம், மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. உள்கட்டமைப்பிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, தமிழகத்தில் 48% பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர்.


    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் உலகத் தரத்திலான போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்தி உள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகிய துறைகளில் சமூக நல திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #GIM2019 #EdappadiPalaniswami
    Next Story
    ×