search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
    X

    சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். #ChennaiExhibition #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொருட்காட்சியை தொடங்கிவைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் நடத்தப்படும் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியின் இந்த ஆண்டு கருப்பொருள், சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மயமாற்றம் என்பதாகும். 28 மாநில அரசு துறைகள், 16 மாநில பொதுத்துறை நிறுவனங்கள், 2 மத்திய அரசு நிறுவனங்கள், 4 பிறமாநில அரசு நிறுவனங்கள் மற்றும் 60 தனியார் அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

    பொருட்காட்சியில் துபாயில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தின் மாதிரி வடிவம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், மேக கூட்டங்களை பிரதிபலிக்கும் மாதிரி ஆகிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டு சாதனங்கள் இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மாநில அரசின் ஆக்கப்பூர்வமான பணிகளையும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களையும், மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்துவருகிறது. மருத்துவத்திற்கு வருபவர்களும், உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு வரும் மாணவர்களும் என தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்தவண்ணம் உள்ளனர்.

    2014, 2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை சிறப்பான வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்த சாதனைகளுக்காக அரசை பாராட்டாமல், ஒருசிலர் இந்த அரசைப் பற்றி வேண்டுமென்றே ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மக்களிடத்திலே பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் கூறும் கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகிற பொருட்களை மக்கள் பயன்படுத்திட செய்வதுதான் பொருளாதார வளர்ச்சியின் முதல்படி. அதன் அடிப்படையில் பொருட்காட்சிகள் உருவாக்கப்பட்டன.

    வெறும் பொருட்களின் காட்சியாக மட்டும் அவை இல்லாமல், சுற்றுலா வளங்களையும், அரசின் திட்டங்களை மக்கள் அறிந்திடவும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்னவென்று தெரிந்துகொள்ளவும் உதவுகிற பொருட்காட்சிகளாக இதனை மாற்றியவர் எம்.ஜி.ஆர். இந்த பொருட்காட்சி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த 1977-ம் ஆண்டு முதல் ஒரு புதிய வடிவத்தைப் பெற்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா வரவேற்றார். சுற்றுலா ஆணையர் பழனிகுமார் நன்றி கூறினார்.

    இந்த பொருட்காட்சி இன்று (வியாழக்கிழமை) முதல் 70 நாட்கள் நடைபெறும். பெரியவர்களுக்கு ரூ.35, சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும். தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறும். 
    Next Story
    ×