search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய்- ரே‌சன் கடைகளில் 7ந்தேதி முதல் வினியோகம்
    X

    பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய்- ரே‌சன் கடைகளில் 7ந்தேதி முதல் வினியோகம்

    தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வரும் 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் வழங்கப்படுகிறது. #PongalGift #EdappadiPalaniswami
    சென்னை:

    கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொகுப்பு பச்சை நிற ரே‌சன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

    சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

    ஆனால் இந்த வருடம் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடியே ஒரு லட்சம் குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைகிறார்கள்.

    இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூர் மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்த பின்னர் திருவாரூர் மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது தி.மு.க. ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போதும் கூட அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. 1000 ரூபாய் பணமும் வழங்கப்படவில்லை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முதன் முதலாக அனைத்து ரே‌சன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

    ஏழைகள், வசதி படைத்தவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொருட்கள் வாங்குகின்ற அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் கிடைக்கும்.

    இதன் மூலம் அரசுக்கு ரூ.1,974 கோடியே 17 லட்சம் செலவாகிறது. பொங்கல் பொருட்கள் தொகுப்பிற்கு மட்டும் ரூ.257 கோடியே 52 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



    பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கும். இந்த பொருட்களுடன் பை ஒன்றும் வழங்கப்படும்.

    பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் அனைத்து ரேசன் கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைத்தாரர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ நேரில் சென்று பெற்று கொள்ள வேண்டும்.

    பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பேக்கிங் செய்யும் பணி நடைபெறுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டு இருப்பதால் காகித பையில் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

    பொங்கல் பரிசு 7-ந்தேதி முதல் அனைத்து ரே‌சன் கடைகளிலும் கிடைக்கும் வகையில் இத்திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    அதனை தொடர்ந்து அடுத்த வாரம் முதல் 13-ந்தேதி வரை பொங்கல் பரிசு அனைவருக்கும் கிடைக்கும்.

    நெரிசல் இல்லாமல் வழங்கும் வகையில் ஒவ்வொரு ரே‌சன் கடைகளிலும் தினமும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    எந்தெந்த கார்டுகளுக்கு எந்த நாட்களில் பெற்றுக் கொள்வது என்பது குறித்து ரே‌சன் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்படும். #PongalGift #EdappadiPalaniswami
    Next Story
    ×