search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விவகாரத்தில் மோடியின் மோசடியை அம்பலப்படுத்துவோம் - வீரப்பமொய்லி
    X

    ரபேல் விவகாரத்தில் மோடியின் மோசடியை அம்பலப்படுத்துவோம் - வீரப்பமொய்லி

    ரபேல் விவகாரத்தில் மோடியின் மோசடியை அம்பலப்படுத்துவோம் என்று பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் வீரப்பமொய்லி கூறியுள்ளார். #RafaleCase

    சென்னை:

    ரபேல் விவகாரத்தில் நடந்துள்ள குளறுபடிகள் பற்றி, நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று மாநில தலைநகரங்களில் முக்கிய தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.

    சென்னையில் பாராளுமன்ற நிதிக்குழு தலைவர் வீரப்பமொய்லி இன்று சத்தியமூர்த்திபவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டது. நான் பிரதமரானால் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

    ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும். வேலையில்லா திண்டாட்டம் இருக்காது என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவிலை. மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.

     


    அதன் காரணமாகத்தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் மீண்டும் காங்கிரசை மக்கள் பதவியில் அமர்த்தி இருக்கிறார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல் தலைமையில் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதற்கான சிக்னல்தான் இது.

    ரபேல் போர் விமானம் வாங்குவதில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு அளித்து தீர்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

    இந்த விவகாரத்தில் மோடி செய்துள்ள மோசடிகள், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அம்பலமாகும். கூட்டுக்குழு விசாரணை நடத்தாமல் விடமாட்டோம். இதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.

    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். ஆனால் விசாரணைக்குப் பிறகு மன்னிப்பு கேட்கப் போவது யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வீரப்பமொய்லியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் சிரஞ்சீவி, தணிகாசலம், ராயபுரம் மனோகர், ஜி.கே.தாஸ் ஆகியோர் வரவேற்றனர். #RafaleCase

    Next Story
    ×