search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசிமேட்டில் சுனாமி ஒத்திகை - தீயணைப்புபடை, போலீஸ், மருத்துவகுழு பங்கேற்பு
    X

    காசிமேட்டில் சுனாமி ஒத்திகை - தீயணைப்புபடை, போலீஸ், மருத்துவகுழு பங்கேற்பு

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது.
    ராயபுரம்:

    கடலோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை குழு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது. இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுனாமி தாக்கப்போவதாக ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

    இது சுனாமி ஒத்திகை என்பதை அறியாத அந்த பகுதி மக்களில் பலர் பதட்டம் அடைந்தனர். பின்னர் ஒத்திகை என்பதை தெரிந்து கொண்டதும் ஆர்வமுடன் அதை கவனித்தனர்.

    இந்த ஒத்திகையின்போது சுனாமி தாக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? உயிரை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீயணைப்பு படையினர், மருத்துவ குழு, போலீஸ், மின்வாரிய ஊழியர்கள், வருவாய் துறை உள்ளிட்ட 15 துறைகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் செய்து காட்டினார்கள்.

    பிளாஸ்டிக் படகு மூலம் மக்களை மீட்பது, காயம்பட்டவர்களை ஸ்ட்ரெக்சர் மூலம் தூக்கிச் செல்வது போன்றவற்றை நடித்து காட்டினார்கள். பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. காலை 9.30 மணிமுதல் மதியம் ஒரு மணி வரை இந்த ஒத்திகை நடந்தது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

    Next Story
    ×