search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு - கலெக்டர் ரோகிணி தகவல்
    X

    சேலம் மாவட்டத்தில் 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு - கலெக்டர் ரோகிணி தகவல்

    சேலம் மாவட்டத்தில் 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்தது. இதை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நின்றனர்.

    அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர்(பொறுப்பு) அருணாசலம் வரவேற்றார். அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்(பொறுப்பு) சத்யா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எச்.ஐ.வி. கிருமியின் அளவை கணக்கீடு செய்யும் கருவியை கலெக்டர் ரோகிணி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் மிக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டத்தில் ஒன்றாக சேலம் மாவட்டமும் திகழ்கிறது. இருப்பினும் அவர்களுக்கான சிறப்பான மருத்துவ சிகிச்சை, எச்.ஐ.வி. தடுப்பு பணி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செய்து வருகிறோம். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள எச்.ஐ.வி. கிருமியின் அளவினை கணக்கீடு செய்யும் கருவி மூலம் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் ஏ.ஆர்.டி. மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 94,858 பேர் எச்.ஐ.வி. பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளனர். இதில் 363 பேருக்கு புதியதாக எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 15 கர்ப்பிணிகள் அடங்குவர்.

    இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மேற்பார்வை யாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.
    Next Story
    ×