search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த மாணவிக்கு ஆயுர்வேத கல்லூரியில் இடம் ஒதுக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த மாணவிக்கு ஆயுர்வேத கல்லூரியில் இடம் ஒதுக்க ஐகோர்ட்டு உத்தரவு

    1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்த மாணவிக்கு ஆயுர்வேத கல்லூரியில் இடம் ஒதுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#highcourt

    சென்னை:

    சென்னையை சேர்ந்த 16 வயது மாணவி யஸ் ஹேஷ்யதா. இவர் எல்.கே.ஜி.யில் படித்தபோது 1330 திருக்குறளை மனப்பாடமாக ஒப்பிவித்து சாதனை படைத்தவர்.

    அதற்காக அவருக்கு தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 8-ம் வகுப்பு படித்தபோது உலக தமிழ் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்றார்.

    2011-ம் ஆண்டு தலைநகர் தமிழ்ச்சங்கம் சார்பில் ‘திருக்குறள் மாமணி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 12-ம் வகுப்பை முடித்த யஸ் ஹேஷ்யதா 2018-19ம் கல்வியாண்டுக்கான ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பித்தார். அவர் 157.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்று இருந்தார்.

    ரேங்க் பட்டியலில் 1648 முதல் 1666 வரைக்குள் இருந்தார். ஆனால் 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கணக்குப்படி மாணவிக்கு 17 வயது முடிவடையாததால் அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    இதையடுத்து மாணவி தனக்கு கல்லூரியில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறும்போது, “மாணவி பல்வேறு விருதுகள் வாங்கிய திறமை வாய்ந்தவராக உள்ளார். சிறு வயதிலேயே மேதையாக திருக்குறளை ஒப்புவித்து சாதனை படைத்து இருக்கிறார்.

    ஆனால் ஆயுர்வேத கல்லூரி படிப்பு கலந்தாய்வில் 17 வயது பூர்த்தியாகாததை காரணம் காட்டி அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர் 157.25 கட்-ஆப் மார்க் பெற்று இருக்கிறார்.

    2016-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி திருத்தப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் விண்ணப்பித்து உள்ளார். இதில் மாணவி கலந்தாய்வில் பங்கேற்க தடை இருப்பதாக இந்த ஐகோர்ட்டுக்கு தெரிய வில்லை.

    கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏ.குமார் அளித்த அறிக்கையில், மாணவி எடுத்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு சித்தா அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தனியார் கல்லூரியில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

    கன்னியாகுமரியில் உள்ள மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இடம் காலியாக உள்ளது. அந்த கல்லூரியை பரிசீலனை செய்யலாம். அவரை கலந்தாய்வில் அனுமதித்து படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்று இருந்தால் கலந்தாய்வில் இடம் ஒதுக்க வேண்டும்” என்றார். #highcourt

    Next Story
    ×