search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் 50 சதவீதம் அகற்றம்
    X

    எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் 50 சதவீதம் அகற்றம்

    எண்ணூர் துறைமுகத்தில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் 50 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. #EnnorePort #OilSpill

    பொன்னேரி:

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஈராக்கில் இருந்து எம்.டி.கோரன் ஸ்டார் என்ற கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு வரப்பட்டது. கடந்த 14-ந் தேதி இந்த கப்பல் துறை முகத்துக்கு வந்து சேர்ந்தது.

    நேற்று அதிகாலை 4 மணி அளவில் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது இணைப்பு குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கப்பலில் நிலை தளத்தின் மீது கொட்டியது. பின்னர் அங்கிருந்து வழிந்து கடலில் கலந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக எண்ணெய் செல்லும் குழாயை அடைத்தனர். இதனால் பெரிய அளவில் கச்சா எண்ணெய் வெளியேறவில்லை.

    எனினும் சுமார் 2½டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்து விட்டது. இதனால் கப்பலை சுற்றி எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. எண்ணெய் படலம் பரவாமல் இருக்க உடனடியாக அவசர மீட்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

    கடலில் கொட்டிய கச்சா எண்ணெய்  மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், மிதக்கும் எண்ணெயை அகற்ற வசதியாகவும் கப்பலை சுற்றிலிலும் மிதவை தடுப்புகள் போடப்பட்டன.

     


    துறைமுக தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கடலோ பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணூர் துறை முகத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    எண்ணெய் படலத்தை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆகாய மார்க்க மாகவும், கடலில் உள்ளே இருந்தும் எண்ணெய் படலம் எதுவரையில் பரவி இருக்கிறது என்று கணக்கிடப்பட்டது. இதில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு எண்ணெய் பரவியிருப்பது தெரிய வந்தது. துறைமுகத்தை ஒட்டிய கடல் பகுதியில் மிதவை தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்திற்குள் மட்டும் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து எண்ணெயை உறிஞ்சும் நான்கு பெரிய ஸ்கிம்பர் கருவியை கடலில் இறக்கி எண்ணெய் படலத்தை உறிஞ்சி வருகின்றனர். இன்று 2-வது நாளாக பணி நடந்து வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் மிதவை தடுப்புகள் போடப்பட்ட இடத்தை சுற்றிலும் படகுகள் மூலம் துறைமுக ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணித்து வருகின்றன. கடலோர காவல் படை படகுகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. உறிஞ்சி எடுக்கப்படும் கச்சா எண்ணெய் பேரல்களில் சேகரிக்கப்பட்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதற்கிடையே இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான மாசு கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படும் ‘சமுத்ரா பஹேரேதார்’ என்ற கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் படலத்தை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருவதால் விரைவில் இந்த பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து துறைமுக ஊழியர் ஒருவரிடம் கேட்ட போது, “கப்பலில் இருந்து கொட்டிய கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. மிதவை போடப்பட்ட இடத்திற்குள்ளேயே எண்ணெய் மிதக்கிறது.

    மேலும் அது பரவ வாய்ப்பு இல்லை. எனவே பெரிய அளவில் கடலில் மாசு ஏற்படாது.  50 சதவீத எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது.  இன்று மாலைக்குள் பணி முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

    எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு 2 கப்பல்கள் மோதிய விபத்தில் கச்சா எண்ணெய் கொட்டியது. இதில் எண்ணூரில் இருந்து நீலாங்கரை வரையிலும் பரவியிருந்தது. இதனால் கடலில் மாசு ஏற்பட்டு கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2 ஆண்டுகளில் எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணை கொட்டு வது இது 2-வது முறை ஆகும். #EnnorePort  #OilSpill

    Next Story
    ×