search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 7½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
    X

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 7½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு 7 லட்சம் 37,489 பேர் பயணம் செய்துள்ளனர். #Diwali #SpecialBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 3, 4 மற்றும் 5-ந் தேதிகளில் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 2-ந் தேதி முதலே சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த வருடம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    11,367 பஸ்கள் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் அதிகமாக வந்ததால் கூடுதலாக 2267 சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. சிறப்பு பஸ்கள் மற்றும் வழக்கமான பஸ்கள் என சேர்த்து மொத்தம் 13,634 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன.

    சென்னையில் மட்டும் 4 நாட்களில் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு 7 லட்சம் 37,489 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் முன்பதிவு செய்த பயணிகள் 56 ஆயிரம் பேர் ஆவர். பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை திரும்ப வசதியாக 1500 சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

    மேலும் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வருவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து துறையுடன் இணைந்து போலீசார் செய்துள்ளனர்.


    நாளை அதிகாலை முதல் சென்னைக்கு வரும் பஸ்களை முறையாக கண்காணித்து ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்களை கோயம்பேடுக்கு விடாமல் தாம்பரம் சானிட்டோரியம் (மெப்ஸ்) பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

    இதே போல வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியில் இருந்து வரும் பஸ்களை பூந்தமல்லியிலேயே நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    இது தவிர வண்டலூர் பாலத்தின் மீது பஸ்களை ஏற்றி இறங்கும் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம் வரை சாலையோரமாக கொண்டு சென்று பயணிகளை இறக்கி விடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் செல்ல இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    அரச விரைவு பஸ்களில் பயணம் செய்ய வருகின்ற 11-ந் தேதி வரை முன்பதிவு நடைபெறுகிறது. #Diwali #SpecialBuses
    Next Story
    ×