search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்- அமைச்சர் சரோஜா வேண்டுகோள்
    X

    சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்- அமைச்சர் சரோஜா வேண்டுகோள்

    பள்ளிக்குழந்தைகளின் நலனை கருதி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அமைச்சர் சரோஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். #TNMinister #saroja #Nutritionstaff
    சென்னை:

    அமைச்சர் சரோஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு சத்துணவு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியாளர்களும், சில மையங்களில் 4 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    சத்துணவு அமைப்பாளர்கள் தேவைப்படும் உணவுப் பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பது, அன்றாடம் சமைப்பதற்கு காய்கறிகள் மற்றும் தாளிதப் பொருட்களை வாங்கி வழங்குவது, பொருட்களின் கணக்கை பராமரிப்பது ஆகிய பணிகளை செய்கின்றனர்.

    தமிழ்நாட்டில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் 3 சதவீதம் ஊதிய உயர்வுடன் சிறப்பு காலமுறை ஊதியம், வழங்கி வருவது மட்டுமல்லாமல், மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளையும் ஏற்று, சத்துணவுப் பணியாளர்களின் ஊதியத்தை அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.

    அது மட்டுமன்றி, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

    அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி ஆகியவற்றை உள்ளடக்கி, இன்றைய தேதியில் பணியில் சேரும் ஒரு அமைப்பாளர் ரூ.10,353/ம், சமையலர் ரூ.6,429/ம், சமையல் உதவியாளர் ரூ.5,230/ம் ஒரு மாத சம்பளமாக பெறுவர்.

    ஏற்கனவே பணியில் உள்ள பணியாளர்கள் தாங்கள் பணி செய்த காலத்திற்கேற்ப இதைவிட அதிக ஊதியம் பெற்று வருகின்றனர்.


    தமிழ்நாட்டில் மட்டும் தான் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடம் உள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் சத்துணவு அமைப்பாளர் என்ற பணியிடமே இல்லை.

    51.96 லட்சம் மாணாக்கர்களின் பசியினை போக்கும் இத்திட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வரும் சத்துணவுப் பணியாளர்களின் நலனைப் பேணிக்காக்க தமிழ்நாடு அரசு தற்போது வழங்கி வரும் பல்வேறு சலுகைகளை கருத்தில் கொண்டும், சத்துணவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி ஊதிய விகிதத்தினை மாற்றி அமைத்திருப்பதைக் கருத்தில் கொண்டும், சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #TNMinister #saroja #Nutritionstaff
    Next Story
    ×