search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்பு பண மோசடி வழக்கு ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு
    X

    ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்பு பண மோசடி வழக்கு ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு

    ப. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானவரித்துறை தொடர்ந்த கருப்பு பண மோசடி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. #PChidambaram #MadrasHC
    சென்னை:

    காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்கியுள்ளனர்.

    இந்த சொத்துக்கள் வாங்கிய விபரங்களை அவர்கள் 3 பேரும், தங்களது வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை.

    இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015ம் ஆண்டு கருப்பு பணம் தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்தார்.

    இந்த சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.

    அதாவது, இங்கிலாந்து நாட்டில், ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்புக்கள் இரண்டு சொத்துக்களும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் எப்படி வாங்கப்பட்டுள்ளது? என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியது.


    பின்னர், கருப்பு பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில், வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.

    இந்த வழக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலையில் பிறப்பித்தனர்.

    அந்த தீர்ப்பில், ‘நளினி சிதம்பரம் உள்பட 3 பேருக்கு எதிராக கருப்பு பணம் மோசடி சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர வருமான வரித்துறை இயக்குனர் அனுமதி வழங்கியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்கிறோம். நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக கருப்புபணம் மோசடி சட்டத்தின் கீழ் எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்கிறோம்’ தீர்ப்பு அளித்தனர். #PChidambaram #MadrasHC
    Next Story
    ×