search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை- பள்ளிகளுக்கு விடுமுறை

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையை அடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. எனினும் தூத்துக்குடி நகர் பகுதியில் மழையின்றி காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது.

    தொடர்ந்து விடிய விடிய மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள தெரு உள்ளிட்ட சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்து நின்றது.

    நகர் பகுதியில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கன மழையினால் தூத்துக்குடியில் கடும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. அதுபோல் நிகழாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறை, வருவாய்துறையினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்ப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் காயல்பட்டினம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் பகுதியில் கனமழை கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினம் பகுதியில் 98.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இப்பகுதியில் நேற்று மாலையில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. அவ்வப்போது இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதேபோல் திருச்செந்தூர் பகுதியில் 84 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    தூத்துக்குடி புறநகர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் உப்பளங்கள் நீரில் மூழ்கின. உப்பளங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். எனினும் உப்பு உற்பத்தி இன்னும் முழுமையாக நடைபெறவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையை அடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்தார்.

    தென்திருப்பேரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான குரங்கணி, கடயனோடை ஆழ்வார் திருநகரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பள்ளிவாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ரோட்டில் தட்டுத்தடுமாறி சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலைவரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    காயல்பட்டினம்-98.4, திருச்செந்தூர்-84, ஓட்டப்பிடாரம்-57, தூத்துக்குடி-55.8, சாத்தான்குளம்-40, வைப்பார்-39, ஸ்ரீவைகுண்டம்-25, வேடநத்தம்-20, கயத்தாறு-16, விளாத்திகுளம்-12, கடம்பூர்-11, மணியாச்சி-10, கீழஅரசடி-9. #tamilnews
    Next Story
    ×