search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நீதிமையம் சார்பில் 8 கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம் - கமல்ஹாசன்
    X

    மக்கள் நீதிமையம் சார்பில் 8 கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம் - கமல்ஹாசன்

    தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 8 கிராமங்களை தத்தெடுக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து வருகிறோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHassan #Kamalpolitics

    சேலம்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘‘மக்களுடனான பயணம்’’ என்ற பெயரில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இன்றும், நாளையும் இந்த சுற்றுப்பயணம் நடக்கிறது.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று கமல்ஹாசன் கல்லூரி மாணவர்களை சந்தித்தார். பின்னர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    மக்களுடன் பேசுவதற்காக மகுடஞ்சாவடியில் மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் நடுத்தெருவில் நின்று பேசுகிறேன். ஆனால் அனுமதி மறுக்க, மறுக்க கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கும்.

    எவ்வளவு தடைகள் இருந்தாலும், அதை இந்த காளை எதிர்கொள்ளும். சட்ட சபையில் எதிர்கட்சிகள் வெளி நடப்பு செய்த போது தொடர்ந்து கேள்வி கேட்டது மக்கள் நீதிமையம் தான். 60 கிராமங்கள் உடைய இந்த மகுடஞ்சாவடியில் பஸ் நிலையம் கிடையாது. அதை நான் உங்களுக்காக அரசிடம் கேட்பேன்.

    தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல. உங்களை சந்திக்க மீண்டும், மீண்டும் வருவேன். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாளை நமதே. இவ்வாறு அவர் பேசினார்.


    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் பேசும்போது, மக்களுக்கு தேவையான துணிகளை நெய்யும் உங்களால், புதிய தமிழகத்தை உருவாக்கவும் முடியும். நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் என்ன? என்பது உங்களுக்கு தெரியும். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 8 கிராமங்களை தத்தெடுக்கப்பட்டு அரசை விட சிறந்த திட்டங்களை செயல்படுத்த வேலைகள் நடந்து வருகிறது.

    மல்லசமுத்திரம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. ஆனால் எல்லாநேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர உங்களின் வலிமை எங்களுக்கு தேவை என்றார்.

    இளம்பிள்ளை அதிகளவில் நெசவாளர்கள் வசித்து வரும் பகுதியாகும். உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். ஜி.எஸ்.டி.வரியால் நீங்கள் மட்டும் அல்ல நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

    நான் உங்களுக்காக வேலை செய்வதற்கு நீங்கள் எங்கள் கைகளை வலுப்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். அதை நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

    2-வது நாளான இன்று காலை 9.30 மணிக்கு ஓமலூரில் மக்களுடனான பயணத்தை கமல்ஹாசன் தொடங்கினார். 1 மணிக்கு மேட்டூரிலும், 4.30 மணிக்கு கெங்கவல்லியிலும், 5.30 மணிக்கு ஆத்தூரிலும், 6.30 மணிக்கு அயோத்தியாப்பட்டினத்தி லும், இரவு 7.30 மணிக்கு சேலம் பள்ளப்பட்டியிலும் பொது மக்களுடன் கலந்துரையாடுகிறார். 8.15 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அவர் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர்.  #KamalHassan #Kamalpolitics

    Next Story
    ×